பழமொழியும் பொருளும் (2017-12-05)

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள்.

தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

 
Share
0 Shares